லெனின் - நாகம்மாள் உருவப்படத் திறப்புவிழா. புரட்சி - சொற்பொழிவு - 03.12.1933 

Rate this item
(0 votes)

தோழர்களே!

இப்போது நடக்கப்போவது படத் திறப்புவிழா- இதை நடத்திக் கொடுக்கச் சென்னை தோழர்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் கல்யாணசுந்திர முதலியாரவர்களையும் கேட்டுக் கொண் டோம். அவ்விரு பெரியார்களும் நமது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இங்கு விஜயம் செய்துள்ளார்கள். நமது இயக்கக் கொள்கைகள் முழுமையும் அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றவர்களல்ல. பல விஷயங்களில் நமக்கும் அவர்களுக்கும் பலமான அபிப்பிராய பேதம் உண்டென்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும் நாம் ஏன் அவர்களைத் தேடிப் போனோம்? அவர்களது விஜயத்தால் நமது கொள்கைகளுக்கும், அபிப்பி ராயங்களுக்கும் ஆதரவும் பலமும் கிடைக்குமென்கின்ற எண்ணத்தி னால்தான். இந்தச் சங்கதிகள் அவர்கள் தெரிந்தே தங்களது ஆதரவும் இவ்வியக்கத்துக்கு இருக்கட்டும் என்கின்ற பெருந்தன்மையான தயாள குணத்துடனேயே இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள். எனக்கும் அவர் களுக்கும் சில காலமாய் அபிப்பிராயபேதம் இருந்து வந்தது. அதைப்பற்றி நாங்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும் வந்திருக்கிறோம். ஆனால் எல்லாம் ஒரே தத்துவத்தின் மீதேயொழிய வேறில்லை. அதாவது மனித சமூகத்துக்கு அவரவர்களால் கூடுமான தொண்டைச் செய்ய வேண்டும் என்கின்ற தீவிர அவாவினாலேயே ஒழிய அவரவர்கள் சொந்தவீட்டு வாழ்க்கைப் பிழைப்புக்காக அல்ல. அபிப்பிராயப் பேதங்கள் ஏற்படுவது சகஜம். முன் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்கள் சரியல்லவென்று தோன்று வதும் சகஜம். ஒவ்வொரு மனிதனுக்கும் சரீர அமைப்பில் அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கு காரணமாகிய மூலாதார அமைப்புகள் வேறு. அதன் பயனாய் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுத்தான் தீரும். அதுபோலவே அபிப்பிராயங் கள் மறுபடியும் ஒற்றுமைப்பட்டும் வரும். 

அந்த முறையிலேயே இப்போது இவ்விரு பெரியார்களுடைய அபிப் பிராயங்கள் பலது நமது அபிப்பிராயங்களுக்குப் பிரமாதமான மாறுபாடில்லாவிட்டாலும் பலது ஒற்றுமையாகவும் இருந்து வருவதை நான் "தமிழ்நாடு” பத்திரிகை மூலமாகவும், "நவசக்தி” பத்திரிகை மூலமாகவும் தோழர் முதலியார் அவர்களால் எழுதப்பட்ட "சமரச சன்மார்க்க போதம்” என்னும் புத்தகத்திலுள்ள பல வாக்கியங்கள் மூலமாகவும் உணர்ந்தேன்! அப்போதே நான் அவர்களது ஒற்றுழைப்பையும் கூட்டுறவையும் பெற ஆசைப்பட்டேன். நமது இயக்கத்தில் எனக்குள்ள பற்றானது எங்கெங்கெல் லாம் நமக்கு ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் நுழைந்து ஆதரவு பெற வேண்டும் என்கின்ற ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது. அது எவ்வளவு கொஞ்சமானாலுஞ்சரி என்று தான் ஆசைப்படுகிறேன். நமது இயக்கத்துக்கு மாறுபட்ட சில அபிப்பிராயங்கள் அவர்களிடம் இருக்கிறதென்றாலும் அவ் வபிப்பி ராயங்களையும் அவர்கள் நமக்கு உபதேசிக்கட்டும். அது சரியா னால் தான் நாம் ஒப்புக் கொள்ளுவோமே தவிர டாக்டர் வரதராஜுலுவும், கல்யாண சுந்திர முதலியாரும் சொல்லுகின்றார்களே என்று நினைத்து நாம் ஏமாந்துவிட மாட்டோம். அப்படிப்பட்டவர்கள் சு.ம. இயக்கத்தில் இருப்பார் களென்று நான் நம்பவேயில்லை. நமது இயக்கத்தில் இல்லை. நமது இயக்கத் தத்துவமே அதுதான். அதாவது “கடவுள்” சொன்னதாகச் சொன்னதையே ஒப்புக் கொள்ளாமல் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்ற நாம் இவர்கள் சொல்வதைக் கண்மூடிக் கொண்டு ஒப்புக் கொள்ளப்போகிறோமா? 

அபிப்பிராய பேதத்தைத் தெரிவிக்க இடங் கொடுத்தால், அதைத் திருத்தவோ அல்லது நாம் திருந்தவோ சமயமும், இடமும் ஏற்படுமாதலால் அவர்களது எவ்வித அபிப்பிராயமும் நமக்குப் பலன்படக் கூடியதேயாகும். சுமார் 10 வருஷங்களுக்கு முன்பு நான் இவர்களைப் பின்பற்றியே நடந்த வன் என்பது உங்களுக்குத் தெரியும். இவைகளையெல்லாம் உத்தேசித்துத் தான் நாங்கள் அவர்களை வரும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கிணங்கி விஜயஞ்செய்திருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன். 

தவிர, இப்பெரியார்களை தோழர். நாகம்மாள் உருவப்படத்தை திறந்து வைக்கவே நாம் கேட்டுக் கொண்டோம். தோழர் லெனின் அவர்களின் உருவப்படத் திறப்பு விழாவிற்கு தலைமை வகிக்க தோழர் எம். சிங்காரவேலு அவர்களையும் திறந்து வைக்க கொச்சி பொதுவுடமைவாதி தோழர் கே.எம். இப்ராஹிம், பி.ஏ., எம்.எல்.சி. அவர்களையும் கேட்டுக் கொண்டோம். ஆனால் தோழர் சிங்காரவேலு அவர்கள் காயலாபட்டு விட்டதாகவும் தோழர் கே.எம். இப்ராஹிம் கடன் மறுப்பு பிரசாரத்தில் சட்ட மறுப்பு செய்து சிறைப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து விட்டதால் அந்தப் படத்திறப்பு விழாவையும் ஆற்றும்படி இவர்களையே வேண்டிக் கொண்டு டாக்டர் வரதராஜுலு அவர்களை தலைமையை ஏற்றுக் கொள்ளும்படி உங்கள் சார்பாக வேண்டி கொள்ளுகின்றேன். 

குறிப்பு: ஈரோடு ஸ்டாலினா மண்டபத்தில் 26.11.1933ல் நடந்த படத்திறப்பு விழாவில் தலைமை முன்மொழிவுஉரை. 

புரட்சி - சொற்பொழிவு - 03.12.1933

Read 56 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.